Saturday, July 13, 2013

அவரைக்கண்டால் இனி பயமில்லை...!

அவரைக்கண்டால் இனி பயமில்லை...!


தாளம் தப்பாத பாட்டுக்காரர்களை நினைவு படுத்தும்

“கட் கடா கட் கட்”

எனும் இயந்திர ஓசை

இன்ப துன்பங்களைச் சமமெனக்கொள்ளும்

ஞானியின் உள்ளம்போல்

உணர்வுகள் தவிர்த்து

ஒலிக்கும்



வார்த்தைக்குறைப்பில்

சில்லறை சேமிக்கும்

சிக்கன எண்ணம் நினைவுக்கு வருவது

பெரும்பாலோர்க்கு

தந்தி அலுவலகத்தில் தான்.

அதனால் தந்தி வாக்கியங்கள்

சிதிலமடைந்து போகும்.!



வாழ்த்து வாக்கியங்களுக்கு

குறியெண் வந்தகாலங்களில்

திருமணத்திற்கு

“எட்டு” கொடுப்பதா

“பதினாறு” கொடுப்பதா என்று

பெரும் விவாதம் நடக்கும்.



தீபாவளி பொங்கலுக்கு

வாழ்த்து அட்டைகள்

இருந்ததால்

தந்தி வாழ்த்தை

யோசித்தது இல்லை.



பெரும்பாலும் அவர் வருகை

சகுனத்தடையாகவே கருதப்பட்டது

அந்த நாட்களில்..

ஓடி ஒளிவோம் அவர் மிதிவண்டி கண்டு.



தந்தி கொண்டுவரும்

‘நாமக்கார’ கோபால் நாயுடுவுக்கு

சாந்தமான முகம்தான் என்றாலும்

எருமை வாகனத்தில் வந்த எமனைப்போலவே

அவரது வருகை

அனைவராலும் உணரப்பட்டது.

மதில்மேல் பூனை போல்

அவரது பார்வை

கதவு எண்ணைத்தேடும் போது

கதி கலங்கும் மனசு.



பெரும்பாலும் துக்கச்செய்திதான்

அவரிடமிருந்து..!

ஓரிரு சமயங்களில்

குழந்தை பிறந்த மகிழ்ச்சிச்செய்தியும்

வரும்.



வாழ்த்துத்தந்திகள் வந்த பிறகு

மணவிழாக்காலங்களில்

சிலசமயம் அவர் தென்படுவது உண்டு.

பயந்தே பார்ப்போம்...

அப்போதும் அவரை.



கால மாற்றத்தில்

பழையன கழிந்து

புதியன புகுந்ததில்

இல்லாமல் போன

அவரைக்கண்டால் இனி பயமில்லை...!



(இந்திய அரசின் தொலைத்தந்தி சேவை 163 ஆண்டு நெடிய பயணத்தின் பின் 15-ஜூலை 2013 அன்றோடு நிறுத்தப்பட உள்ளது.)

No comments:

Post a Comment