Sunday, October 30, 2011

கூரை இடுக்கில் நிலா (ஹைக்கூ கவிதைகள்)

கூரை இடுக்கில் நிலா
(ஹைக்கூ கவிதைகள்)
சொ ச அருள் நம்பி
1986 முதல் 1991 வரை வெவ்வேறு சூழல்களில் எழுதப்பட்ட இந்த ஹைக்கூ கவிதைகள், தாமரை, தினமணி கதிர், இலட்சுமி அம்மாள் பல்தொழில் நுட்பப்பயிலக ஆண்டு மலரில் வெளி வந்தவை.
*
புல்தரை எங்கணும்
பனி மகுடங்கள்.
புகழ்.
*
அடித்துத் துவைக்காதீர்கள்
சோப்புத்தூள் விளம்பரமல்ல.
நெசவாளியின் நெஞ்சம்.
*
உன் இதயத்தில் நான்.
வளர்ந்தது விஞ்ஞானமல்ல.
காதல்.
*
வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறார்கள்
பாவிகளல்லர்..
பள்ளிச்சிறார்கள்..!
*
கடவுளைத்தேடி
மதங்கள்..!
மனித நேயம்..?
*
விளக்கு இல்லையா ?
யார் சொன்னது...
கூரையிடுக்கில் நிலா..!
*
கடற்கரை மணல்வெளியில்
காலடிச்சுவடுகள்.
நினைவுகள்.
*
விழி அம்பு வீச
மனசுக்குள் காயம்
பனைமரத்தில் கொட்டிய தேள்.
*
கம்பனுக்குப்பின்
கவிதை போயிற்றா ?
ஏன் குழந்தைகள்..!
*
வயல்வெளியில்
நல்ல விளைச்சல்.
பசியோடு சோளக்காட்டு பொம்மை.
*
காற்று
பூவின் பரிமளம் வண்டு நுகர
ஒருதலைக்காதலில்.
*
கசாப்புக்கடையில்
புத்தர் படம்.
அரசியல்வாதிகள்.
*
ஆடைகளே நிர்வாணமாய்..
ஆம்..
பெண்ணுரிமை..!
*
வண்டியோட்டியே..
பாதையை மாற்று..!
வண்டித்தடத்தில் எறும்புச்சாரை.
*
கரிசல் மண்ணில்
பருத்தி மலர்..!
உழைப்பு.
*
காதலுக்கு கண்ணில்லை
இரும்பு வேலியில்
மல்லிகைக்கொடி..!
*
உலகை இயக்கும் பஞ்ச பூதங்க்கள்
பணம், பணம்
பணம், பணம், பணம்
*
புல்லைத்தழுவும்
பனிக்காற்று.
அவள் நினைவு.
*
உடல் எங்கிலும்
மரவட்டைப்பூச்சிகள்
தீப்பெட்டித்தொழிற்சாலை.
*
என் விழியை
நோக்காதே தோழி..!
கண்ணுக்குள் அவர்.
*
மனம் முழுக்க
பாலைவனத்தாகம்.
கண்ணெதிரே கடற்பரப்பு.
*
அரிசி வாங்கக் காசில்லை.
பசி பொறுத்திடு மகனே..!
தியேட்டரில் தலைவர் படம்.
*
ஏரிக்கரையில்
பறவைகள் சரணாலயம்.
மீன்கள்..!
*
இட்ட அடி நோக
எடுத்த அடி கொப்பளிக்க..
பாதணியின்றி என் மக்கள்..!
*
மானம் காக்க
துணியில்லை..!
மார்பகத்தில் குழந்தை.
*
நோக்கும் திசையெங்கும்
நாமின்றி வேறில்லை
லஞ்சம்.
*
வீடு முழுக்க சிலந்தி வலைகள்.
எனது வெறுப்பில்
போகிப்பண்டிகை..!
*
நமக்கு எதிரி
யாருமல்லர்
மரத்தையே வெட்டும் கோடாரி.
*
பௌர்ணமிக்கால
வட்ட நிலா.
சோகத்தில் நான்.
*
கடிக்காமல் உட்கார்ந்து கொள்
கொசுவே..!
சுவரோரத்தில் பல்லி.
*
கடவுளில்லை என்றால் அறையுங்கள்
கோபிப்பாள்..
வலியோடு ஈன்றெடுத்த என் அன்னை..!
*
குளத்தங்கரையில்
பிள்ளையார்த்தவம்.
வேலைவாய்ப்பு.
*
எடுத்தபின்பும்
கண்ணை உறுத்தும் தூசி.
முதற்காதல்.
*
சீதையை மட்டுமே
சந்தேகிக்கத்தெரிந்த இராமர்கள்.
ஓ..உயரதிகாரிகள்.
*
தண்ணீர் இறைக்க மனமில்லை.
கிணற்று நீரில்
மிதக்கும் நிலா..!
*
உன் கடிதத்தில்
அஞ்சல் முத்திரைகள்.
ஓ..என் இதயம்..!
*
இனியும் புலால் உண்ணோம்.
தோட்டத்து மரக்கிளையில்
கைகூப்பியது அணிற்குஞ்சு.
*
காதலிக்க நேரமில்லை
அருவி நீர்ச்சிதறலில்
மாலைச்சூரியன்.
*
எத்தனை முறைதான்
அக்கினிப்பிரவேசம் ..?
தாமதமகவே உன் கடிதங்கள்.!
*
பூக்களைக்கைது செய்யுங்கள்..
காணவில்லை..
என் இதயம்.
*
மனிதருக்குத்தான் இரக்கமில்லை
மின்சாரக்கம்பியில்
எத்தனை குருவிகள்.
*
வயல் முழுக்க
சூரியகாந்திப்பூக்கள்.
வேலைக்குச்செல்லும் பெண்கள்.
*
ஒரே இரயில் பெட்டிதான்..
எதிர் எதிரே..
பயணிகள்.
*
வானத்தில் கூட
ஏன் இத்தனை விரிசல்கள்.
ஓ.. மின்னல்கள்.
*
யார்க்குத்தான் தற்பெருமை இல்லை
ஏரிக்கரையில்
முகம் பார்க்கும் ஆலமரம்.
*
தென்னை மரத்தின்
உடல் முழுக்கத்தழும்புகள்.
அனுபவங்கள்.
*
இயந்திர யுகத்தில்
தென்றலை வெறுக்கும்
காற்றாலை.
*
மரத்தைப்பழித்து
சலசலக்கும் சருகுகள்.
மௌனமாகவே வேர்கள்.
*
பயணத்தின்போது எனக்கு எதிர்த்திசையிலே
நான் நேசிக்கும் மரங்கள்.
எனக்குத்துணையாக என் நிலா.

(1986 முதல் 1991 வரை வெவ்வேறு சூழல்களில் எழுதப்பட்ட ஹைக்கூ கவிதைகள்).
சொ ச அருள் நம்பி

Sunday, April 24, 2011

சரணமே சரணம் சாயி..!
*-------------------------*

கண்களில் கருணை தேக்கி
கடவுளின் வடிவமாகி
எங்களின் கவலை போக்கி
இதயத்தில் வாழும் தேவே..!

மருத்துவம் கல்வி ஈந்தாய்..!
மக்களுக்கென்றும் நீ ..தாய்..!
இருத்துவம் உம்மை எங்கள்
இதயத்தில் சாயி நாதா!

அன்பொன்றே கடவுள் என்றாய்
அன்பினால் துயர் துடைக்கும்
பண்பினால் தெய்வம் ஆனாய்..!
பாதங்கள் பணிந்தோம் சாயி !

சிந்தையில் உம்மை வைத்தோம்
சிரமங்கள் எமக்கு ஏது
சந்திர சூரியர்க்கு
சகத்திலே மறைவு ஏது..?

சத்தியம் பொய்ப்பதில்லை
சரித்திரம் மறைவதில்லை
சத்திய சாயி பாதம்
சரணமே சரணம் சாயி..!


சொ ச.அருள் நம்பி
24/04/2011