Sunday, October 30, 2011

கூரை இடுக்கில் நிலா (ஹைக்கூ கவிதைகள்)

கூரை இடுக்கில் நிலா
(ஹைக்கூ கவிதைகள்)
சொ ச அருள் நம்பி
1986 முதல் 1991 வரை வெவ்வேறு சூழல்களில் எழுதப்பட்ட இந்த ஹைக்கூ கவிதைகள், தாமரை, தினமணி கதிர், இலட்சுமி அம்மாள் பல்தொழில் நுட்பப்பயிலக ஆண்டு மலரில் வெளி வந்தவை.
*
புல்தரை எங்கணும்
பனி மகுடங்கள்.
புகழ்.
*
அடித்துத் துவைக்காதீர்கள்
சோப்புத்தூள் விளம்பரமல்ல.
நெசவாளியின் நெஞ்சம்.
*
உன் இதயத்தில் நான்.
வளர்ந்தது விஞ்ஞானமல்ல.
காதல்.
*
வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறார்கள்
பாவிகளல்லர்..
பள்ளிச்சிறார்கள்..!
*
கடவுளைத்தேடி
மதங்கள்..!
மனித நேயம்..?
*
விளக்கு இல்லையா ?
யார் சொன்னது...
கூரையிடுக்கில் நிலா..!
*
கடற்கரை மணல்வெளியில்
காலடிச்சுவடுகள்.
நினைவுகள்.
*
விழி அம்பு வீச
மனசுக்குள் காயம்
பனைமரத்தில் கொட்டிய தேள்.
*
கம்பனுக்குப்பின்
கவிதை போயிற்றா ?
ஏன் குழந்தைகள்..!
*
வயல்வெளியில்
நல்ல விளைச்சல்.
பசியோடு சோளக்காட்டு பொம்மை.
*
காற்று
பூவின் பரிமளம் வண்டு நுகர
ஒருதலைக்காதலில்.
*
கசாப்புக்கடையில்
புத்தர் படம்.
அரசியல்வாதிகள்.
*
ஆடைகளே நிர்வாணமாய்..
ஆம்..
பெண்ணுரிமை..!
*
வண்டியோட்டியே..
பாதையை மாற்று..!
வண்டித்தடத்தில் எறும்புச்சாரை.
*
கரிசல் மண்ணில்
பருத்தி மலர்..!
உழைப்பு.
*
காதலுக்கு கண்ணில்லை
இரும்பு வேலியில்
மல்லிகைக்கொடி..!
*
உலகை இயக்கும் பஞ்ச பூதங்க்கள்
பணம், பணம்
பணம், பணம், பணம்
*
புல்லைத்தழுவும்
பனிக்காற்று.
அவள் நினைவு.
*
உடல் எங்கிலும்
மரவட்டைப்பூச்சிகள்
தீப்பெட்டித்தொழிற்சாலை.
*
என் விழியை
நோக்காதே தோழி..!
கண்ணுக்குள் அவர்.
*
மனம் முழுக்க
பாலைவனத்தாகம்.
கண்ணெதிரே கடற்பரப்பு.
*
அரிசி வாங்கக் காசில்லை.
பசி பொறுத்திடு மகனே..!
தியேட்டரில் தலைவர் படம்.
*
ஏரிக்கரையில்
பறவைகள் சரணாலயம்.
மீன்கள்..!
*
இட்ட அடி நோக
எடுத்த அடி கொப்பளிக்க..
பாதணியின்றி என் மக்கள்..!
*
மானம் காக்க
துணியில்லை..!
மார்பகத்தில் குழந்தை.
*
நோக்கும் திசையெங்கும்
நாமின்றி வேறில்லை
லஞ்சம்.
*
வீடு முழுக்க சிலந்தி வலைகள்.
எனது வெறுப்பில்
போகிப்பண்டிகை..!
*
நமக்கு எதிரி
யாருமல்லர்
மரத்தையே வெட்டும் கோடாரி.
*
பௌர்ணமிக்கால
வட்ட நிலா.
சோகத்தில் நான்.
*
கடிக்காமல் உட்கார்ந்து கொள்
கொசுவே..!
சுவரோரத்தில் பல்லி.
*
கடவுளில்லை என்றால் அறையுங்கள்
கோபிப்பாள்..
வலியோடு ஈன்றெடுத்த என் அன்னை..!
*
குளத்தங்கரையில்
பிள்ளையார்த்தவம்.
வேலைவாய்ப்பு.
*
எடுத்தபின்பும்
கண்ணை உறுத்தும் தூசி.
முதற்காதல்.
*
சீதையை மட்டுமே
சந்தேகிக்கத்தெரிந்த இராமர்கள்.
ஓ..உயரதிகாரிகள்.
*
தண்ணீர் இறைக்க மனமில்லை.
கிணற்று நீரில்
மிதக்கும் நிலா..!
*
உன் கடிதத்தில்
அஞ்சல் முத்திரைகள்.
ஓ..என் இதயம்..!
*
இனியும் புலால் உண்ணோம்.
தோட்டத்து மரக்கிளையில்
கைகூப்பியது அணிற்குஞ்சு.
*
காதலிக்க நேரமில்லை
அருவி நீர்ச்சிதறலில்
மாலைச்சூரியன்.
*
எத்தனை முறைதான்
அக்கினிப்பிரவேசம் ..?
தாமதமகவே உன் கடிதங்கள்.!
*
பூக்களைக்கைது செய்யுங்கள்..
காணவில்லை..
என் இதயம்.
*
மனிதருக்குத்தான் இரக்கமில்லை
மின்சாரக்கம்பியில்
எத்தனை குருவிகள்.
*
வயல் முழுக்க
சூரியகாந்திப்பூக்கள்.
வேலைக்குச்செல்லும் பெண்கள்.
*
ஒரே இரயில் பெட்டிதான்..
எதிர் எதிரே..
பயணிகள்.
*
வானத்தில் கூட
ஏன் இத்தனை விரிசல்கள்.
ஓ.. மின்னல்கள்.
*
யார்க்குத்தான் தற்பெருமை இல்லை
ஏரிக்கரையில்
முகம் பார்க்கும் ஆலமரம்.
*
தென்னை மரத்தின்
உடல் முழுக்கத்தழும்புகள்.
அனுபவங்கள்.
*
இயந்திர யுகத்தில்
தென்றலை வெறுக்கும்
காற்றாலை.
*
மரத்தைப்பழித்து
சலசலக்கும் சருகுகள்.
மௌனமாகவே வேர்கள்.
*
பயணத்தின்போது எனக்கு எதிர்த்திசையிலே
நான் நேசிக்கும் மரங்கள்.
எனக்குத்துணையாக என் நிலா.

(1986 முதல் 1991 வரை வெவ்வேறு சூழல்களில் எழுதப்பட்ட ஹைக்கூ கவிதைகள்).
சொ ச அருள் நம்பி