Sunday, June 20, 2010

தமிழைப்போற்றுவோம்....!

தமிழைப்போற்றுவோம்....!

தமிழைப்போற்றுவோம்; நாளும் தமிழைப்போற்றுவோம்..!
அமிழ்தினும் இனிய அருமைத்தாய்மொழி தமிழைப்போற்றுவோம்,,,!

இயல் இசை நாடகம் எனும் முத்தமிழினில்
இயலாதது எது ? எண்ணுங்கள்;
பயன்விளை இலக்கியம் பண்ணுறு இலக்கணம்
நல்பாதை வகுக்கவில்லையா சொல்லுங்கள்..!

அகம் புறம் இரண்டென அற நெறி வாழ்வியல்
அமைத்து வாழ்ந்தது எவ்வினம் ?
முகம் நக நட்பது நட்பன்று என
உளவியல் கண்டது எம்மொழி ?

ஐவகை நிலங்களும் ஐந்திணை நெறிகளும்
அமைந்திடு செம்மொழி எம்மொழி ?
யாவரும் உறவினர் யாதும் நம்மூர் என
பாவழி சொன்னவர் நாமன்றோ ?

தமிழைப்போற்றுவோம்; நாளும் தமிழைப்போற்றுவோம்..!
அமிழ்தினும் இனிய அருமைத்தாய்மொழி தமிழைப்போற்றுவோம்,,,!

ஐம்பெருங்காப்பியம் அருந்திருக்குறளென
அருள் நெறி நூல்கள் இங்காயிரம்..
அறுபத்துமூவரும் பன்னிரு ஆழ்வாரும்
அணி செய்தனர் பக்திப்பாயிரம்...!

கம்பன் வள்ளுவன் இளங்கோ எனப்பலர்
கவிதையில் காவியம் செய்தனர்..
நம்கவி பாரதி அவர்தம் தாசனார்
நற்றமிழாடைகள் நெய்தனர்..!

உயிருடன் மெய்யென ஒன்றிடு வார்த்தைகள்
உயிரொடு பேசிடும் நம்மொழி
உயர்ந்தது எனில் இங்கு மறுப்பவர் யாரவர்
உண்டோ நீங்களும் சொல்லுங்கள்..!

தமிழைப்போற்றுவோம்; நாளும் தமிழைப்போற்றுவோம்..!
அமிழ்தினும் இனிய அருமைத்தாய்மொழி தமிழைப்போற்றுவோம்,,,!

(சான் ஆண்டோனியோ தமிழ்ச்சங்க வெளியீடான இளவேனில் இதழில் 14 சனவரி 2006-ல் வெளியான என் கவிதை இது. செம்மொழி மா நாட்டை யொட்டி மறு வெளியீடு செய்யப்படுகிறது.)

Sunday, May 2, 2010

இன்று புதிதாய்ப்பிறந்தோம்...!

இன்று புதிதாய்ப்பிறந்தோம்...!
வாழ்த்துக்கிடைத்தது..வந்ததும் மனது
பூத்துக்குலுங்கிடும் பூமரம் ஆனது...!

என்றும் என்னிடம் இலங்கி நின்றிடும்
தென்றல் மனது திளைத்துத் திரிந்தது...!
கனாக்கள் கண்டு களித்திடும் மனதினில்
வினாக்கள் கொஞ்சம் விரவி நின்றன
யாருக்காக இப்பூமியில் பிறந்தோம்
பாருக்கு என்ன பெருமைகள் என்னால்..?
என்று நினைத்து நின்ற வேளையில் ...உன்
வாழ்த்துக்கிடைத்தது..வந்ததும் மனது
பூத்துக்குலுங்கிடும் பூமரம் ஆனது...!


சித்திரை முதல் நாள் ... விக்ருதி ஆண்டு