Monday, October 22, 2012

பிரியா விடை மடல்.. வணக்கத்துடன்


தெளிவான நெறிகாட்டல்; அரவணைப்பு

திறமை கண்டு ஊக்குவிக்கும் தலைமைப்பண்பு

கனிவான நல்பேச்சு; சொல்லில் நேர்மை

கடமையினை கண்டிப்புடன் நடத்தும் பாங்கு;

செறிவான தொலை நோக்குச்சிந்தையாலே

சிறந்ததையே குறிக்கோளாய் எண்ணும் மாந்தர் ;

அறிவார்ந்த நகைச்சுவையில் நளினம் மிக்கார்;

அரியதொரு நல்தலைவர் ; நம் டேவிட்சன்...!

நல்லதொரு பணி முடிக்க தளங்கள் தந்து

நாளும் என்னை ஊக்குவிக்கும் நல்ல உள்ளம்

அல்லவற்றை இடித்துரைத்துத்திருத்தம் செய்து

அடுத்த செயல் தொடர்ந்திருக்க அறிவுரைத்து

நல்லவற்றை மட்டும் மனத்திருத்தி வைக்கும்

நல்மனிதர் பிரிகின்றார் நாமென் செய்வோம்.!

வெள்ளமற்ற நீர் நிலைபோல் வெறுமையோடு

விடையனுப்ப மனமில்லாது வாழ்த்துகின்றேன்..!

கவிதையல்ல.... ஆக்கிக்கொள்ளலாம்..!


தள்ளாடும் போதையிலும் தரணிமக்கள் மனம் மகிழப்


பண்பாடு மாறாமல் பண் பாடும் மேதையிவன்

துள்ளியோடும் காவிரிபோல் தூய மனத்திண்ணனிவன்

சொல்லாடும் கவி நயத்தைக் காணாதார் மனிதர் இலர்

பள்ளிகொண்ட பரமனுக்குத்தாசனிவன் என்றாலும்

வெள்ளிமலை ஈசன் பால் மாறாத அன்புடையோன்

காருண்ட மேகம்போல் கவிமழையைப் பொழிந்திடுவான்

சீருண்டு இவன் பாட்டில் சிரமமில்லை படிப்பதற்கு.

சருகான மலர் மீண்டும் மலராது என்பார்கள்

சிலையான தெய்வங்கள் பேசாது என்பார்கள்

சருகான மலரும் மலரும்; சிலையான தெய்வங்கள் பேசும்

என் கவித்தலைவன் கண்ணதாசன் கவிதை முன்னால்..!


என் முதல் கவிதை

முக்கண்ணன் மகனை மூஞ்சூறு வாகனனை

திக்கெட்டும் திகழும் சிதம்பர விநாயகனை

ஐங்கரனை ஆறுமுகன் அண்ணனை

மனங்கொண்டு துதித்தால் மறைந்திடும் இடரே..!

1981 ஆம் ஆண்டு ஆவணி மாதம் எழுதப்பட்ட என் முதல் கவிதை. “மனங்கொண்டு நிந்தித்தால்” என்று என்னால் தவறுதலாக எழுதப்பட்டுப்பின் அம்மாவால் “மனங்கொண்டு துதித்தால்” என்று திருத்தப்பட்டது.

கவிதையல்ல.... ஆக்கிக்கொள்ளலாம்..!

பிறந்த நாள் இன்று

பிறப்பது ஒருமுறை; பிறந்தபின் பிறிதுநாள்


இறப்பது ஒருமுறை; இதன்இடை தினம்தினம்

பிறப்பதும் இறப்பதும் அவரவர் மனப்படி;

மறப்பதும் நினைப்பதும் மனிதரின் செயல்வழி;

வெறுப்பதும் விருப்பமும் சமம் என நினைத்து,

சிறப்புறு எண்ணங்கள் சிந்தையில் செதுக்கி

இருப்பதை வளர்த்திட எண்ணங்கள் நிறைத்து

நடப்பதே நல்லது இந்த நாற்பத்தி ஆறில்..!



பிறந்த நாள் இன்று எனக்குப்

பேரன்போடு நன்று...



வாழ்த்தினீர்.. உங்கள் அன்புள்ளம் வாழ்க..!

வாழ்த்துவீர் ஆகையால் வளமுடன் வாழ்க..!

வாழ்த்திட மறந்திடு வீரே ஆயினும்

வாழ்க ..! வாழ்க..! இவ்வையகம் போற்றவே..!

-சொ. ச. அருள் நம்பி

ஐப்பசி 7