Saturday, July 13, 2013

அவரைக்கண்டால் இனி பயமில்லை...!

அவரைக்கண்டால் இனி பயமில்லை...!


தாளம் தப்பாத பாட்டுக்காரர்களை நினைவு படுத்தும்

“கட் கடா கட் கட்”

எனும் இயந்திர ஓசை

இன்ப துன்பங்களைச் சமமெனக்கொள்ளும்

ஞானியின் உள்ளம்போல்

உணர்வுகள் தவிர்த்து

ஒலிக்கும்



வார்த்தைக்குறைப்பில்

சில்லறை சேமிக்கும்

சிக்கன எண்ணம் நினைவுக்கு வருவது

பெரும்பாலோர்க்கு

தந்தி அலுவலகத்தில் தான்.

அதனால் தந்தி வாக்கியங்கள்

சிதிலமடைந்து போகும்.!



வாழ்த்து வாக்கியங்களுக்கு

குறியெண் வந்தகாலங்களில்

திருமணத்திற்கு

“எட்டு” கொடுப்பதா

“பதினாறு” கொடுப்பதா என்று

பெரும் விவாதம் நடக்கும்.



தீபாவளி பொங்கலுக்கு

வாழ்த்து அட்டைகள்

இருந்ததால்

தந்தி வாழ்த்தை

யோசித்தது இல்லை.



பெரும்பாலும் அவர் வருகை

சகுனத்தடையாகவே கருதப்பட்டது

அந்த நாட்களில்..

ஓடி ஒளிவோம் அவர் மிதிவண்டி கண்டு.



தந்தி கொண்டுவரும்

‘நாமக்கார’ கோபால் நாயுடுவுக்கு

சாந்தமான முகம்தான் என்றாலும்

எருமை வாகனத்தில் வந்த எமனைப்போலவே

அவரது வருகை

அனைவராலும் உணரப்பட்டது.

மதில்மேல் பூனை போல்

அவரது பார்வை

கதவு எண்ணைத்தேடும் போது

கதி கலங்கும் மனசு.



பெரும்பாலும் துக்கச்செய்திதான்

அவரிடமிருந்து..!

ஓரிரு சமயங்களில்

குழந்தை பிறந்த மகிழ்ச்சிச்செய்தியும்

வரும்.



வாழ்த்துத்தந்திகள் வந்த பிறகு

மணவிழாக்காலங்களில்

சிலசமயம் அவர் தென்படுவது உண்டு.

பயந்தே பார்ப்போம்...

அப்போதும் அவரை.



கால மாற்றத்தில்

பழையன கழிந்து

புதியன புகுந்ததில்

இல்லாமல் போன

அவரைக்கண்டால் இனி பயமில்லை...!



(இந்திய அரசின் தொலைத்தந்தி சேவை 163 ஆண்டு நெடிய பயணத்தின் பின் 15-ஜூலை 2013 அன்றோடு நிறுத்தப்பட உள்ளது.)

Sunday, July 7, 2013

கனவாய்த்தெரியுது வாழ்க்கை..!

அம்மா....!

அம்மா..


உணவில் உப்பொதுக்கி உண்மைசுகங் களைஒழித்து

கனவில் கருவில்வளர் உருவம் தனை நினைந்து

மனதில் மணாளன் தனை மறந்து மழலைஎனை

நனவில் சீராட்டிய தாய்..!

அப்பாவுக்கு உவமை உண்டோ..?

அப்பாவுக்கு உவமை உண்டோ..?


முகத்தின் பொலிவினிலே

முழு கோபம் தெறிக்கும்..!

அகத்தின் ஆழத்தே

அன்பே உறைந்திருக்கும்..!


புதுமைச்சிந்தனைகள்

புருவத்திடைப்பிறக்கும் ;

அருமைக்கவிதைகளாய்

அழகு இதழில் பிறக்கும்;


வாய்மைக்குணமிருக்கும்;

வறியவர்க்குதவிடும் நல்

தாய்மை உளமிருக்கும்;

தமிழில் அழகிருக்கும்..!


மரபு காத்து நிற்கும்

மனித குணமிருக்கும்;

உறவைப்போற்றுதலில்

உண்மை அன்பிருக்கும்


முப்பால் மொழியுரைக்கும்

முந்தி அவையத்து இருத்தி வைக்கும்

அப்பாவின் மனத்தினுக்கு

அழகுவமை எங்கிருக்கும்..?

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்


பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ..!

பிறப்பிலே உயர்வென்ன தாழ்வென்ன வந்திடும்


பேதையாய் வாழ்தல் நன்றோ..?

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றகுறள்

பெருமொழி மறந்தோம் இன்று..!



இறப்பினும் புகழுடன் இருப்பதே நன்னெறி

என்னாளும் எண்ணி வாழ்வோம்..!

எரிப்பதோ தணலிடை ; கிடப்பதோ மண்ணிடை

இதனுள்ளே என்ன பேதம்..?



சிறப்புறு வாழ்க்கையை செவ்வனே நடத்திடச்

செய்வதே கடமையாகும்

சிந்தனை தெளிவாக்கி செயல்களில் பொலிவூட்டி

சீலமாய் வாழ்வோம் நன்றாய்..!

முகம் காட்டு.. தமிழ் அகம் காட்டு!

முகம் காட்டு.. தமிழ் அகம் காட்டு!


பாரதம் என்பது பண்பாட்டு உறைவிடம்

சாரதி நீங்கள்..! சாற்றுவேன் ஒரு சொல்..!

வாகனம் ஓட்டிடும் வனிதையரே உங்கள்

தேகம் மறைத்திடும் திறம் மறந்தது ஏன்..?

கொள்ளையர் போலே முகத்தினை மூடி

செல்லுதல் அழகா..? சொல்வீர் நங்கையீர்..!

நறுமுகம் தன்னில் நாணம் துரத்தி

மதிமுகம் மறைக்கும் முகத்திரை தவிர்ப்பீர்..!

பாரதி கண்ட புதுமைப்பெண்களே –உம்

வீரத்திருமுகம் விலக்கிக்காட்டுக..

மறைப்பது மறைத்து மானம் காத்தலே..

சிறப்பது என்பதை சிந்தையில் இருத்துக..

பாரதம் என்பது பண்பாட்டு உறைவிடம்

சாரதி நீங்கள்..! சாரதி நீங்கள்..!