Sunday, June 20, 2010

தமிழைப்போற்றுவோம்....!

தமிழைப்போற்றுவோம்....!

தமிழைப்போற்றுவோம்; நாளும் தமிழைப்போற்றுவோம்..!
அமிழ்தினும் இனிய அருமைத்தாய்மொழி தமிழைப்போற்றுவோம்,,,!

இயல் இசை நாடகம் எனும் முத்தமிழினில்
இயலாதது எது ? எண்ணுங்கள்;
பயன்விளை இலக்கியம் பண்ணுறு இலக்கணம்
நல்பாதை வகுக்கவில்லையா சொல்லுங்கள்..!

அகம் புறம் இரண்டென அற நெறி வாழ்வியல்
அமைத்து வாழ்ந்தது எவ்வினம் ?
முகம் நக நட்பது நட்பன்று என
உளவியல் கண்டது எம்மொழி ?

ஐவகை நிலங்களும் ஐந்திணை நெறிகளும்
அமைந்திடு செம்மொழி எம்மொழி ?
யாவரும் உறவினர் யாதும் நம்மூர் என
பாவழி சொன்னவர் நாமன்றோ ?

தமிழைப்போற்றுவோம்; நாளும் தமிழைப்போற்றுவோம்..!
அமிழ்தினும் இனிய அருமைத்தாய்மொழி தமிழைப்போற்றுவோம்,,,!

ஐம்பெருங்காப்பியம் அருந்திருக்குறளென
அருள் நெறி நூல்கள் இங்காயிரம்..
அறுபத்துமூவரும் பன்னிரு ஆழ்வாரும்
அணி செய்தனர் பக்திப்பாயிரம்...!

கம்பன் வள்ளுவன் இளங்கோ எனப்பலர்
கவிதையில் காவியம் செய்தனர்..
நம்கவி பாரதி அவர்தம் தாசனார்
நற்றமிழாடைகள் நெய்தனர்..!

உயிருடன் மெய்யென ஒன்றிடு வார்த்தைகள்
உயிரொடு பேசிடும் நம்மொழி
உயர்ந்தது எனில் இங்கு மறுப்பவர் யாரவர்
உண்டோ நீங்களும் சொல்லுங்கள்..!

தமிழைப்போற்றுவோம்; நாளும் தமிழைப்போற்றுவோம்..!
அமிழ்தினும் இனிய அருமைத்தாய்மொழி தமிழைப்போற்றுவோம்,,,!

(சான் ஆண்டோனியோ தமிழ்ச்சங்க வெளியீடான இளவேனில் இதழில் 14 சனவரி 2006-ல் வெளியான என் கவிதை இது. செம்மொழி மா நாட்டை யொட்டி மறு வெளியீடு செய்யப்படுகிறது.)

2 comments:

  1. eththanai mugankal unkalukku naan
    Piththanai pola pin thodarnthen
    Aththanai mukathilum arul olithaan en
    Sinthanai sivakka seithanave.
    Mazhaiyena vanthathai eluthivitten.
    Pizhaiyentru kandal poruthiduka...

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்

      Delete